இலங்கையில் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் இன்மை அதிகரித்துள்ள குற்றங்களை கட்டுப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மனித உரிமை மீறல்களையும் இவை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் அறிமுகம் என்ற தலைப்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சாட்சிகளுக்கான பாதுகாப்பு குறித்து உரிய ஏற்பாடுகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு முன்வர தயங்குகின்றனர். இது சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.கடும் மனித உரிமைகள் மீறலுக்கான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசாரணைகளின் போது சாட்சிகள் தமது சாட்சியங்களை சுதந்திரமாக முன்வைப்பதற்கு தயங்கியமை இதற்கு எடுத்துக் காட்டாகும்.1980களின் பிற்பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
எனினும் இவற்றில் ஒரு சில சம்பவங்களே நீதிமன்றங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டன.பெரும்பாலான வழக்குகளைப் பொறுத்தவரை சாட்சிகள் தமது உயிர் தொடர்பில் அச்சம் கொண்ட நிலையில் நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்கு முன்வரவில்லை.தண்டனை சட்டக் கோவையின் கீழ்வரும் குற்றங்களில் 4 சதவீதமானவை மாத்திரமே சாதகமான விசாரணைக்கு உட்படுத்தக்கூடியதாக உள்ளது.சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு சுட்டிக்காட்டிய விடயங்களுள் சாட்சிகளுக்கான பாதுகாப்பின்மை முக்கியமானதொன்றாகும். இலங்கையில் வினைத்திறன்மிக்க நிரந்தரமான சாட்சிகளை பாதுகாக்கும் முறைமை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது.எனினும் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் தமது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது அவசியமானதாகும் என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது