இலங்கை அரசினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபைக்கான வாக்களிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை நடைபெறவுள்ளது. முக்கிய தளங்கள் பலவற்றை இங்கு அமைத்திருந்த விடுதலைப் புலிகளிடம் இருந்து முழுமையாக இந்தப் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இந்த விடுதலையை மக்கள் அங்கீகரிக்கப் போகின்றார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அரசியல் நெருக்கடி மிக்க பரீட்சார்த்த தேர்தலாக இது கருதப்படுகின்றது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மாகாண சபைக்கான தேர்தலில் இவர்கள் நாளைக் காலை வாக்களிக்கப் போகிறார்கள். 18 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்களில் இருந்து 35 உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில் தெரிவுசெய்யப்படவுள்ளனர். வாக்களிப்புக்காக தேர்தல் கடமைகளில் 15 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபட்டிருக்கி;றார்கள். இராணுவம், அதிரடிப்படையினர், பொலிசார் உட்பட 30 சுமார் 30 ஆயிரம் படையினர் கலகம் அல்லது குழுப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் துப்பாக்கிப்பிரயோகம் செய்யும் அதிகாரத்துடன், பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களும் கிட்டத்தட்ட இராணுவ முற்றுகைக்கு உட்பட்ட நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.
'அபிவிருத்தியுடன் கூடிய சுமுகமான வாழ்க்கைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதா அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்த்து வாக்களிப்பதா என்பதைத் தீர்மானித்து இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டு பிரிந்த மக்கள் விடுதலைப் புலிகளும் ஆளும் கட்சியும் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்த கூட்டமைப்பு, அரச சார்பான ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ் (வரதர் அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன அடங்கிய கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் முக்கியக் கட்சிகளாகப் போட்டியிடுகின்றன. கடந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றியீட்டிய விடுதலைப் புலிகள் சார்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலைப் பகிஸ்கரித்திருக்கி;ன்றது. ஆயினும், ஆளும் கட்சி அடங்கிய கூட்டமைப்புக்கு எதிராகத் தமது வாக்குகளைப் பயன்படுத்துமாறு அந்தக் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இந்தத் தேர்தலில் அரசுக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. எனினும், மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய வேட்பாளராகிய பிள்ளையானா அல்லது, அதே கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹிஸ்புல்லாவா கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சாரவதற்காகத் தெரிவாகப் போகின்றார்கள் என்ற கேள்வியையும் இந்தத் தேர்தல் பூதாகரமாக எழுப்பியிருக்கி;ன்றது. இதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவராகிய ரவுப் ஹக்கீமும் முதலமைச்சாரகத் தெரிவு செய்யப்படுவதற்கான தேர்தல் பரீட்சையில் குதித்திருக்கி;ன்றார்.
தமிழ் மக்களும், முஸ்லிம்களும் கிட்டத்தட்ட சமனாகவும், 20 வீதமுடைய சிங்கள வாக்காளர்களும் இந்தத் தேர்தலின் பலப்பரீட்சைக்குப் பதிலளிப்பதற்காக வாக்களிக்கப் போகின்றார்கள். உள்ளுர் மற்றும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய 2 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இவர்களின் வாக்களிப்பைக் கண்காணிப்பதற்குத் தயாராகியிருக்கின்றார்கள்.
கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான மாகாணசபை உட்பட நாட்டில் 8 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இதற்கு 13 ஆவது அரசில் திருத்தச் சட்டம் அதிகாரபூர்மான அந்தஸ்தை அரசியலமைப்பில் வழங்கியிருந்தது. எனினும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றினையடுத்து, வடக்கையும் கிழக்கையும் இரண்டு மாகாணங்களாக தற்போதைய அரசு பிரித்துள்ளது. இந்தப் பிரிவின் பின்னர் கிழக்கு மாகாணத்திற்கான இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது.
அதேவேளை, வடக்கே வன்னிப் பிரதேசத்தில் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களுடன் நிழல் அரசொன்றை நடத்தி வருகின்ற விடுதலைப் புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் யுத்தத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தலிருந்து அரசாங்கம் தன்னிச்சையாக ஜனவரி மாதத்தில் விலகியதையடுத்து, வடக்குப் போர்முனைகளில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவருவதாகக் கூறும் அரசாங்கம், விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து வடக்கிலும் தேர்தல் நடத்தப்படும் என சூளுரைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.