சிறிலங்காவில் சுகாதார சேவைகள் துறையினரின் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தாதியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மருத்துவமனையில் 3 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:
நோயாளர்கள் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரிடம் கருத்து கேட்கப்படும்.
சுகாதார சேவைகளின் தொழிற்சங்கங்கத்தினரின் இத்தகைய போராட்டத்தைத் தடை செய்யக்கூடிய சட்டத்தை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
அனைத்து இலங்கை சுகாதார சேவைகளின் தொழிற்சங்கப் பிரதிநிதி சமன் இரத்னபிரிய இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மருத்துவர்களுக்கு சாதகமாக சுகாதார அமைச்சு எமது தொழிற்சங்க உரிமையை அடக்க முயற்சித்தால் அனைத்துப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இரத்தினபுரி மருத்துவமனையில் பணிபுரிந்த தாதியர் ஒருவரை இடமாற்றம் செய்ததைத் தொடர்ந்து தாதியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே நேற்று மாலை தாதியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.