அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து நிலையத்திற்கு அண்மித்து உள்ள பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவர், முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இருப்பினும் "சிற்றி கபே" என்ற தேநீர் விடுதிக்குள்ளேயே குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொதியில் வைக்கப்பட்ட நிலையில் குண்டு வெடித்ததாகவும் அம்பாறையிலிருந்து கிடைக்கும் பின்னைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 30 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அம்பாறை தேசிய மருத்துவமனையின் இயக்குநர் லங்காதிலக்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அமைச்சர் பேரியல் அஸ்ரப்பை குறிவைத்தே இத்தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் சிறிலங்கா அரச தரப்பு தகவல்கள் இதனை மறுத்துள்ளன.