சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) தேர்தல் கண்காணிப்பு குழுவில் அமைச்சர்கள் சிபார்சு செய்தோரை ஈடுபடுத்துவதை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் அவ்வமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதுபற்றி பிரஸ்தாப அமைப்பின் தலைவர் ரொட்ரிகோவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ள ரவூப் ஹக்கீம், இதற்கு எடுத்துகாட்டாக, அகதி முகாம்களில் கடமையற்றும் முகாம் அதிகாரிகளை வன்னி புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிபாரிசின் பேரில் ""பெப்ரல்'' தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மிகவும் நம்பகமாக தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு விசுவாசமானவர்களையும், பக்கச்சார்பாக நடந்து கொள்வோரையும் கண்காணிப்பாளர்களாக நியமிப்பது, தேர்தல் மோசடிகள் நடப்பதற்கு இடமளிப்பதோடு, தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெறுவதற்கும் தடையாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பலத்த எதிர்ப்பையும் அவர் தெரிவித்துள்ளார்.