கிழக்கு மாகாண சபைத் தேர் தலை முன்னிட்டு அம் பாறை, திருகோணமலை மட்டக் களப்பு ஆகிய மூன்று மாவட்டங் களிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. 28ஆயிரம் பொலிஸாரும் 3500 இராணுவத்தினரும் கிழக்கில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஷேட பாதுகாப்பு கடமைக்காக 7500 பொலிஸார் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண தேர்தல் பாதுகாப்பு குறித்து தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்தின கூறியதாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எவ்வித வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாதிருக்கும் வகையில் அம்மாகாணத்தின் பாதுகாப்பு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 28 ஆயிரம் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணசபைக்கு உரித்தான மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மற்றும் கந்தளாய் போன்ற பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன்ட், மற்றும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என தலா ஐந்து பொலிஸ் அதிகாரிக்ள தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேலதிக பாதுகாப்புக்காக பொலிஸாரின் ஆயுதம் தாங்கிய 76 நடமாடும் தொலைத்தொடர்பு வாகனங்கள் மாகாணத்தின் வெவ்வெறு பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற கிழக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அப்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதுடன் வன்முறைகளற்ற தேர்தல் இடம்பெறுவதற்கான வழிமுறைகளையும் பொலிஸார் கையாண்டனர். அதேபோன்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போதும் இவ்வாறானதொரு பாதுகாப்பு நடவடிக்கையொன்று கையாளப்பட்டுள்ளதுடன் அதைவிட அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் கையாண்டு வருகின்றனர்.
தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படும் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் அதிகளவிலான பொலிஸாரை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிகேடியர் கருத்து
இதேவேளை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3ஆயிரத்து500 இராணுவத்தினர் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.
இவர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் தங்கியுள்ளதுடன் தேர்தல் நடவடிக்கைகயின் போது பொலிஸாருக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.