ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் நீடிப்பை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா அரசாங்கம் பெற்றால் அது வர்த்தக சலுகை நீடிப்பைப் பெறும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவிற்கான தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது:
இந்த நீடிப்பு தேவை எனில் அரசு அதற்கான தகுதியைப் பெறவேண்டும். அதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசுடன் நெருக்கமாக பணியாற்றும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கையை நீடிப்பது தொடர்பாக உள்ளூர் ஊடகங்களில் பல தரப்பட்ட குழப்பமான செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் உண்மை என்னவெனில் சிறிலங்காவுடனான வர்த்தக உடன்படிக்கைகளை மேலும் 3 வருடங்களுக்கு நீடிப்பதையே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகின்றது.
கடந்த சில வருடங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அபிவிருத்திக்காக 1 பில்லியன் டொலர்களை சிறிலங்கா அரசிற்கு கடனாகவும், உதவியாகவும் வழங்கியுள்ளது.
இந்த வருடமும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி கடன் உதவியாக 100 மில்லியன் டொலர்களை வழங்குவதற்காக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதி உதவிகள் எதிர்வரும் இரு வருட அபிவிருத்திகளுக்காக செலவு செய்யப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தச் சலுகைகளை நீடிக்கும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.