நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியானதுமாக நடத்த வேண்டியது தேர்தல்கள் ஆணையாளரின் பொறுப்பு என உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் தினத்தன்று ஆயுதக்குழுக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதை தடைசெய்ய வேண்டுமென கோரி, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அவ்வியக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஷிரால் லக்திலக்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேற்படி மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆயுதங்களுடன் பிள்ளையான் குழுவினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணைகளின் போது மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு சுட்டிக் காட்டினார்.
இதனையடுத்து இன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியானதுமாக நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு இருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது. அத்துடன், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் பிரதியொன்றை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைப்பதோடு இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான ஆலோசனையை வழங்கவேண்டுமென சட்டமா அதிபருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.