கிழக்கில் சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்கி முகாம்களை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் முகாம்கள் அகற்றப்படவோ, ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்படவோ இல்லை.
மாறாக புதிய முகாம்களே அமைக்கப்பட்டுள்ளன தேர்தல் ஆணையாளரின் உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக்குழுக்கள் மற்றும் அவர்களது முகாம்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் அறிவித்தோம்.
இதற்கமைய இம்முகாம்களை சோதனை செய்து சட்டத்திற்கு முரணான ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்கி முகாம்களை அகற்றுமாறும் தேர்தல்கள் ஆணையாளர் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளார். ஆனால், எதுவுமே இடம்பெறவில்லை.
ஆனால், இன்று புதிதாக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன பொத்துவில் பொலிஸ் பிரிவில் கடந்த 7 ஆம் திகதி முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கான பொருட்களை விநியோகிக்க போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கியுள்ளது.
இத்தேர்தலை ஊழல் மோசடிகள் மூலம் வெற்றி பெறுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு படையினர், தேர்தல் அதிகாரிகள் இடமளிக்கலாகாது. மக்கள் விருப்பத்தை வன்முறைகளால் தகர்த்தெறிவது என்பது தற்காலிகமான கனவாகும்.