இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் அதிகளவிலான வன்செயல்கள், வாக்கு மோசடிகள் முறைகேடுகளுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றிருப்பதாக அதிகாரிகளும், சுயாதீன கண்காணிப்பாளர்களும் கவலையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபைக்கு 37 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று கிழக்கின் 3 மாவட்டங்களில் நடைபெற்ற வாக்களிப்பில் 50 சதவீத வாக்களிப்பு நடைபெற்றதாக மதிப்பிடப்பட்ட போதும் எண்ணிக்கை வீதம் மேலும் அதிகரிக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நேற்று காலையில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பு அற்றுக் காணப்பட்ட போதும் பின்னர் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக அதிகாரிகள் கூறினர்.
அதேசமயம், வாக்காளர்கள் மீதான அச்சுறுத்தல், வாக்களிப்பு நிலையங்களுக்கு முகவர்களோ, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ செல்ல விடாமல் விரட்டப்பட்டமை, கள்ள வாக்குப் பதிவு தொடர்பாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் வயது குறைந்த போலி அடையாள அட்டைகளுடன் அனுப்பப்பட்டதாக முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் முறைகேடுகள் தொடர்பாக இருதரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளன.
அநேகமான முறைப்பாடுகள் ஆளும் கட்சிக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று நண்பகல் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக சுமார் 50 குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது.
இவற்றில் சில குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் குழுவிற்கு எதிரானதாகும். அத்துடன், அம்பாறை- திருகோணமலை- மட்டக்களப்பு மாவட்டங்களில் 80 வாக்களிப்பு நிலையங்களில் நேற்று நண்பகல் வரை முறைகேடுகள் நடைபெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் முறையிட்டுள்ளது.
அத்துடன், து திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநயக்க, கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
அமைச்சர் ஒருவரால் தருவிக்கப்பட்ட குண்டர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் கே.எம்.ரசாக் கல்முனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரை இம்சைப்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மூன்று மாவட்டங்களிலும் வாகனங்கள், கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது பரவலாக தாக்குதல் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், கே.ஏ.பாய்ஸ் ஆகியோரின் அடியாட்கள் மூதூர் பகுதியில் தாகாநகர், பாலாநகர், நாதித்தீவு கிராமங்களில் உள்ள முதிய பெண்கள் உள்ளிட்ட வாக்காளர்களைத் தாக்கியதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
தெகியத்தகண்டிய காவல்துறையினர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களை அவர்களின் ஜீப் வாகனங்களுடன் கைது செய்துள்ளனர். வாக்காளர்களை மிரட்டி வாக்கு அட்டைகளை அபகரித்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பெரும் வாக்கு மோசடிகள் நடைபெற்றதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர். கட்சிகளின் பிரநிதிகள் அச்சத்தால் பிரசன்னமாகியிருக்கவில்லை.
திருக்கோவில் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு நகரிலும், புறநகர்ப்பகுதியிலும் பிற்பகல் 3-4 மணிக்கு இடையில் மோசமான வாக்கு மோசடி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியான தேர்தலுக்கு மிகப் பெரும் சவாலாக பிள்ளையான் குழு இருந்ததாக லங்கா தேர்தல் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
திருகோணமலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் பிரதேச செயலக வாரியாக
பதவிசிறிபுரவில் 75 வீதம்
கோமரங்கடவல - 50 வீதம்
மொறவேவ - 50 வீதம்
மூதூர் தமிழ்ப் பிரிவு - 50 வீதம்
மூதூர் முஸ்லிம் பிரிவு - 50 வீதம்
வெருகல் - 68 வீதம்
கிண்ணியா - 75 வீதம்
தம்பலகாமம் - 60 வீதம்
சேருவில - 50 வீதம்
கந்தளாய் - 58 வீதம்
குச்சவெளி - 75 வீதம்
திருமலைப்பட்டினமும் சூழலும் 60 வீதம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் 40-55 வீத வாக்களிப்பு நேற்று நடைபெற்றிருப்பதாக சுயாதீன அமைப்புக்கள் தெரிவித்தன.