ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தெரிவாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (13.05.08) தீவிரமாக இறங்க உள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் புதன்கிழமை (21.05.08) நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபைக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் 47 அங்கத்தவர்களில் இடம் பிடிப்பதற்கு சிறிலங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்றாக சிறிலங்காவின் மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்க நாளை ஜெனீவாவிற்கு பயணமாக உள்ளார்.
நாளை மறுநாள் அங்கு நடைபெறவுள்ள மனித உரிமை சபைக் கூட்டத்தில் சிறிலங்கா சார்பில் மகிந்த சமரசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் நாள் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கூட்டம் காத்திரமான பங்கை வகிக்கும் என்று நம்புவதாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பில் நாம் எமது அறிக்கையை சமர்ப்பிப்போம், அந்த அறிக்கையில் சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன.
இந்த கூட்டத்தில் எமக்கு நல்ல பலன் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
47 அங்கத்தவர்களைக் கொண்ட இந்த சபைக்கு சிறிலங்கா 2006 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது மீண்டும் வாக்கெடுப்பை சந்தித்துள்ளது.
இந்த சபையில் உள்ள நான்கு வெற்றிடங்களில் ஒன்றிற்கு சிறிலங்கா அரசு பாகிஸ்தான், பஹ்ரைன், தீமோர்-லெஸ்ரி, யப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை எதிர்த்துப் போட்டியிடுகின்றன.