வடக்கின் அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டிருக்கும் விசேட செயலணிக் குழுவிற்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென இராணுவ ஒட்டுக்குழுவின் தவைரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உடனடியாகத் தேர்தல்களை நடத்தமுடியாத சூழ்நிலை காணப்படும் வடக்கு மாகாணத்தில் அரசியல் தலைமைத்துவமொன்றை ஏற்படுத்துவதே விசேட செயலணிக் குழுவின் முக்கிய இலக்கு. அதிகாரிகளை ஒன்றிணைக்கும் குழுவாகவே இந்தக் குழு செயற்படும்.
வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுநரின் ஆலோசனைகளுடன் இணைந்து இந்தச் செயலணிக்குழு செயற்படும் என அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அமைச்சர் கூறியிருந்தார்.
வடமாகாணத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் குழு உருவாக்கப்பட்டதே தவிர, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெல்வதற்காக இவ்வாறன நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
வடபகுதியில் காணப்படும் குறைபாடுகள் பற்றி ஜனாதிபதியைச் சந்தித்து எடுத்துக் கூறியதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தேன் என்றார் அவர்.
இடைக்கால ஆலோசனைக் குழுவாகவோ இது இருக்கலாம். பெயரில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வடமாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணிக் குழுவை நியமித்தால் ஏனைய விடயங்கள் பாதிக்கப்படுமென ஜனாதிபதி முன்னர் கூறியபோதும், பின்னர் செயலணிக்குழுவை அமைப்பதற்கு இணங்கிக்கொண்டார்.
வடபகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரத் தொழில்களான மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கு மேலதிகமாக சுகாதாரம், கல்வி, உட்கட்டுமானம் போன்றவற்றின் அபிவிருத்தி குறித்தும் இந்தச் செயலணிக்குழு கவனம் செலுத்தும். விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக நாளாந்த செயற்பாடுகளை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வானொலி நிலையமொன்றை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பது குறித்து தெரியாதுள்ளது என அமைச்சர் கூறியிருந்தார்.
தமது பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் எழுத்துமூலம் அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தபோதிலும், அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டனவா அல்லது அதற்கு அனுப்பப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளனவா என்பது பற்றி மக்களுக்குத் தெரியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள மக்களில் 90 வீதமான மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இல்லை.
இராணுவம் தம்மை விடுவிக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.