சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருளியல் ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய் உள்ளனர்.
வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வகுப்பு எடுத்துவிட்டு புறக்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் வரதராசன் காணாமல் போய் உள்ளார்.
முற்பகல் 11:00 மணிக்கு புறக்கோட்டையில் நிற்பதாகவும் வீட்டுக்கு வருவதாகவும் தொலைபேசியில் தனது மனைவிக்கு வரதராசன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் முற்பகல் 11:30 மணியளவில் சிறிலங்கா காவல்துறையினரின் சீருடையில் 7 பேர் வரதராசனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், மேல் மாடிக்குச் சென்று வரதராசன் கீழே நிற்கின்றார் என்றும் வீட்டைச் சோதனையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் நின்ற வரதராசனின் மனைவியும் அவரின் சகோதரரான சிறீதரன் ஆகியோர் கீழே வரதராசனைப் பார்க்க வந்தபோது, அவர்கள் இருவரையும் இழுத்து தமது ஊர்திக்குள் தள்ளிய காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர்.
இவர்களில் வரதராசனின் மனைவியை நுகேகொடையில் காவல்துறையினர் இறக்கிவிட்டு 100 ரூபாவைக் கொடுத்து விட்டு தெகிவளை காவல் நிலையத்துக்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.
காவல்துறை உடையில் வந்த 7 பேரும் சிறீதரனை ஊர்தியில் கொண்டு சென்றனர்.
வரதராசனின் மனைவி வெள்ளவத்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெள்ளவத்தை காவல் நிலையத்திலிருந்து வந்ததாக தெரிவித்தே காவல்துறையினர் தமது வீட்டுக்கு வந்ததாக வரதராசனின் மனைவி தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை காவல் நிலையத்தில் மனைவி முறையிட்ட போது தமது காவல் நிலையத்தில் இருந்து எவரும் அவர்களின் வீட்டுக்கு வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை வரை தொலைபேசியில் அழைப்பதாகக் கூறிய வரதராசனுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
வரதராசன் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.