கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபையும் ஏனைய மாகாண சபைகளைப் போல இயங்கும். கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரத்திற்குள் முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்றதன் பின்னரே மாகாணத்திற்கான ஆளுநர் நியமிக்கப்படுவார். பெரும்பாலும் இம்மாததிற்குள் கிழக்கு மாகாண சபைக்கான கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஏ.எல்.எம்.ஏ ஹிஸ்புல்லா, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பெயர்களும் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம் பெயரும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தயாபத்திரனவின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப்பெற்றமையினால் கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னணியிலிருந்தே ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் அந்த நியமனம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படுவதுடன் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சத்தியபிரமாண வைபவம் பிரமாண்டமான முறையில் கொழும்பில் இடம்பெறவிருப்பதனால் அதற்கான ஏற்பாடுகளை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபைக்காக கடந்த வருடந்த வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் நிதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினைகள் இல்லை.