போர்க்களத்தில் பணியாற்றிய சிறிலங்காப் படையினருக்கு வழங்கப்படும் படைத்துறை பட்டம் மற்றும் பதவி உயர்வு விடயங்களில் தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடைப்பிடிக்கும் முறையற்ற போக்கினால் மூத்த அதிகாரிகள் சீற்றம் கொண்டுள்ளதாக இராணு வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டை நடைபெறும் இடங்களில் பணியாற்றிய இராணுவத்தினருக்கு பதவி உயர்வு, அவர்களின் சாதனைகளுக்கு ஏற்றவாறு விருது வழங்குதல், படைத்துறையில் ஆற்றிய பங்கு, பணி மற்றும் மூத்தவர்கள் என்கிற அடிப்படையில் வழங்கப்படும் பட்டம் என பல ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த இராணுவச் சம்பிரதாயங்களுக்கு மாறாக, எந்த விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படாமல், தான் நினைத்தவாறு பாதுகாப்பு அமைச்சுக்குப் பெயர்களை பரிந்துரைத்து பட்டம், பதவி உயர்வு விடயங்களில் எதேச்சதிகாரமாக நடந்து கொள்கின்றார் தற்போதைய இராணுவத் தளபதி என்று இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பிரிகேடியர்களாக தரம் உயர்த்தப்படுவதற்கு தகுதியான போர்க்களங்களில் பணியாற்றிய இராணுவத்தின் 27 கேணல் தர அதிகாரிகள் இந்தப் பதவி உயர்வு விடயத்தில் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.
அண்மையில் முகமாலையில் இராணுவத்தினர் முகம் கொடுத்த பாரிய சண்டையில் இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதியாக பணிபுரிந்த பிரிகேடியர் சமந்த சூரியபண்டார, வோசிங்ரன் செல்லும் இராணுவத்தின் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் இவரது படைத்துறை அனுபவத்துக்கும் இந்தப் பயணத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறிய பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள், இவரது இந்தப் பயணம் பல மாதங்களுக்கு முன்னரே ஒழுங்கமைக்கப்பட்டது என்று தெரிவித்தன.
அப்படியானால், இவரது முகமாலை களமுனை அனுபவத்தை தவிர்த்து விட்டுப்பார்த்தால் இராணுவத் தளபதிக்கு மெய்ப்பாதுகாவலராக முன்னர் பதவி வகித்தார் என்பதனை விட அமெரிக்கா செல்லும் அளவுக்கு அவர் சாதித்ததாக கூற எதுவும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் மெய்ப்பாதுகாவலர்களின் பொறுப்பாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் தம்மிக்க லியனகே என்பவர் தற்போது கிழக்கில் சிறப்பு அதிரடிப்படை தளபதியாக மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், வடக்கு-கிழக்கில் எந்தக் களமுனை அனுபவமும் இல்லாதவர் மட்டுமல்ல. கடந்த 5 வருடங்களாக கொழும்பில் பணிபுரிந்தவர். இந்தப் பதவிக்கு நியமிக்கக்கூடிய மூத்த அதிகாரிகளின் வரிசையில் 30 ஆவது இடத்தில் உள்ள தம்மிக்க லியனகே எப்படி இராணுவத் தளபதியின் கண்ணுக்கு முதல்தர அதிகாரியாக காணப்பட்டார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் கேள்வி எழுப்பியுள்ளன.
இவ்வாறு உதாரணங்களை அடுக்கிக்கொண்டு செல்லும் படை வட்டாரங்கள், படையினரின் சேவை பாராட்டி வழங்கப்படும் சிறப்புச் சேவைக்கான விபூசண விருது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு காண்பிக்கும் கண்மூடித்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது 1981 ஆம் ஆண்டு அப்போதைய அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் ஆரம்பிக்கப்பட்ட படையினரின் சேவையைப் பாராட்டும் சிறப்பு சேவைக்கான விபூசண விருது 30 வருடங்களுக்கு மேல் படையில் உள்ள லெப். கேணல் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தை வகிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், தற்போது இந்த விருதுக்கு தேர்வு செய்யும் முறையில் பல முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் அப்படி கிடைக்கும் விருதும் பலருக்கு சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரே கிடைப்பதாகவும் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த தடவை இராணுவத்தினரில் 12 பேருக்கு வழங்கப்பட்ட இந்த விருதை சேவையில் உள்ளபோதே வாங்கியவர் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா மட்டுமே ஆவார். ஏனையோர் இளைப்பாறி விட்டனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்
படைத்துறை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பட்டம், பதவி உயர்வு விடயங்களில் இப்போதெல்லாம் அரசியல், பிரபல குடும்பங்கள், கல்வி கற்ற பாடசாலைகள் எனப் பல காரணிகள் வெகுவாக செல்வாக்கு செலுத்துவதாக பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.