ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை மட்டுமல்லாது வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டிமையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டியமை அரசாங்கத்தின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்திற்கு மட்டுமல்லாது முழு நாட்டின் அபிவிருத்திக்கு ஜனநாயகத்தை வடக்கிற்கு கொண்டு செல்வதற்கும் கிழக்கு மாகாண மக்கள் அனுமதியளித்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் கோரப் பிடியிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தாங்களாகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர். இதன் மூலமாக அந்த மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் துரிதப்படுத்தப்படும். கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது மட்டுமல்லாது வடக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்பதுடன் இந்த தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமான முறையில் நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிய சகல அதிகாரிகளுக்கும் அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.