விமல் வீரவன்ச தலைமையிலான புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக உருப்பெறக்கூடிய அபாயம் நிலவுவதாக ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. விமல் தரப்பினால் உருவாக்கப்படும் புதிய கட்சி மஹிந்தவின் கைப்பொம்மையாகவே செயற்படும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ள போதிலும் அவ்வாறான கட்சிகள் இலங்கை அரசியலில் எவ்வாறான ஓர் இடைவெளியை நிரப்புகின்றது என்பது மிக முக்கியமாக நோக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் விமல் தரப்பு எவ்வாறானதொரு அரசியல் இடைவெளியை நிரப்ப உள்ளதென்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் தங்களுக்கே உரிய கொள்கையொன்றின் அடிப்படையில் செயலாற்றுகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தனியானதொரு அரசியல் கொள்கை காணப்படுகின்றது. அதேபோன்று ஜே.வி.பி. காலானித்துவ ஆட்சிக்கு எதிரான கொள்கையொன்றை கடைபிடிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் விமல் தரப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ நேரடியாக அல்லது மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க வாகனங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்து வரும் விமல் தரப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கக்கூடிய ஓர் சூழ்நிலை காணப்படுகிறதென அவர் தெரிவித்துள்ளார்.
விமல் உள்ளிட்ட மாற்றுக் குழு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் கட்சி எவ்வித அவசரமும் காட்டாது எனவும் எதிர்காலத்திற்கு நல்லதோர் பாடமாக இந்தத் தீர்மானங்கள் அமையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.