வவுனியாஅரசபொது வைத்தியசாலையில்,பணியாற்றும் சிற்றூழியர்கள்,தாங்கள் செய்யும் மேலதிக நேர வேலைக்கேற்ற கொடுப்பனவுகள் வழங்கபட வேண்டும் எனகோரி இன்று 2 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு,இது விடயம் குறித்து பேச்சு நடத்தியதையடுத்து,ஏனைய வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மேலதிக நேர கொடுப்பனவுகளை போன்று வவுனியா சிற்றூழியர்களுக்கும் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து,வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது,
வவுனியா வைத்தியசாலைக்கு சுமார் 300 சிற்றூழியர்கள் தேவைப்படுகின்றபோதிலும் 176 பேரே தற்போது கடமையில் இருப்பதாகவும், இதனால் இவர்கள் மேலதிக கடமைகளை செய்ய வேண்டியிருப்பதாகவும்,சிறிலங்கா குடியரசு சௌக்கிய சேவை சங்கத்தின் வடமாகாண கிளையின் தலைவர் கறுப்பையா கண்ணன் தெரிவித்தார்.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வாரத்தில் சிற்றூழியர்கள் 80 தொடக்கம் 100 மணித்தியாலங்கள் மேலதிக கடமையி;ல் ஈடுபடுகின்ற போதிலும் தங்களுக்கு 20 மணித்தியாலங்களுக்குரிய ஓவர் டைம் கொடுப்பனவே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏனைய வைத்தியசாலைகளில் இவ்வாறு பணியாற்றும் சிற்றூழியர்களுக்கு 60 மணித்தியாலத்திற்குரிய கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், தங்களுக்கும் குறைந்தது அந்த வகையிலாவது கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே தாங்கள் அடையாள வேலை நிறத்தத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஏற்கனவே பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு, இந்த சிற்றூழியர்களின் விபரங்கள் கோரப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் ஏனைய வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதைப் போன்று வவுனியா வைத்தியசாலைக்கும் வழங்கப்படும் என நேற்று தொலைபேசி மூலமாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். இந்த உறுதிமொழியையடுத்து, சிற்றூழியர்கள் தமது வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு கடமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.