கிழக்கு மாகாணத்தில் தேர்தலொன்று நடத்தப்படவில்லை. மாறாக எமது படையினரால் இருபது வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட அப்பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்து அவர்களின் குரலை அரசாங்கம் நசுக்கியுள்ளது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் இனவாதத்திற்கு தூபமிடப்பட்டுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஜே.வி.பி. யின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை நாவலையிலுள்ள ""சோலீஸ்'' ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜே.வி.பி.எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:
விடுதலைப் புலிகளின் ஆக்கிரமிப்பால் நசுக்கப்பட்டிருந்த கிழக்கு வாழ் மக்களை எமது படையினர் மீட்டனர். அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும். அம் மக்களுக்கு படிப்படியாக சகஜ வாழ்க்கைக்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஜனநாயக உரிமைகளை வழங்குவதோடு, ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர் யுவதிகளையும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இதற்கு பதிலாக பலாத்காரமாக தேர்தலொன்றை திணித்து ஆயுதக்குழுவுடன் மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பறித்து அரசாங்கத்தை ஏற்படுத்தி மீண்டும் அம் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. எமது வரலாறுகளில் ஆட்சியாளர்கள் இழைத்த கொடுமைகள் காரணமாக இனப்பிரச்சினை தோன்றி இருபது வருடகால யுத்தத்தை எமக்கு சொந்தமாக்கியுள்ளது.
1971 இல் பயங்கரவாததச் தடைச் சட்டம் கொண்டுவந்தபோது யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் அதற்கெதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்தனர். என்ன நடந்தது அன்றைய ஆட்சியாளர்கள் அவர்களின் கைகளை உடைத்து போராட்டத்தை நசுக்கினார்கள்.
1981யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி சபை தேர்தல்கள் நடத்தப்பட்டது. அப்போதைய ஐ.தே.கட்சி ஆட்சி யாழ். பொது நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது. கள்ள வாக்குகள் போடப்பட்டன. தெற்கிலிருந்து அமைச்சர்கள், குண்டர்கள் அங்கு சென்று அடாவடித்தனம் புரிந்தார்கள்.
அன்றைய தேர்தலில் 7வாக்குப் பெட்டிகளுக்கு என்ன நடந்தது என இன்றுவரை தகவல்கள் இல்லை.
இறுதியில் அம்மக்கள் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதே நிலைமையை இன்றைய அரசாங்கம் கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது. ஆயுதக்குழுவின் உதவியுடன் மோசடியான தேர்தலை நடத்தி அம் மக்களது அரசியல் தலைமையினையே தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை பறித்துள்ளன.
இது மீண்டும் விடுதலைப்புலிகள் கிழக்கிற்கு ஊடுருவும் ஆபத்தை உருவாக்கியுள்ளன.
அரசாங்கமே கடந்த நாட்களில் கிழக்கிலேயே இயங்கியது. 110 அமைச்சர்களும் அங்கே தான் குடிகொண்டிருந்தனர். அவர்களோடு குண்டர்களும் தங்கியிருந்து ஆயுதக்குழுவுடன் இணைந்து கள்ளவாக்குகள் போடப்பட்டதோடு பலாத்காரங்களும் நடத்தப்பட்டன.
ஒரு பக்கம் தமிழ் இனவாதம் மறுபுறம் முஸ்லிம் இனவாதம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு இன்று அப்பிரதேச மக்கள் மத்தியில் இன முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்படவில்லை.மாறாக ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.