இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாப் பிரதேசத்துக்குச் சென்று அங்கே பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை பாதுகாப்பு நிலைவரங்களை ஆராயும் பொருட்டு வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
வவுனியா சென்ற இராணுவத் தளபதியை அப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வரவேற்று அழைத்துச் சென்றதுடன், வன்னிப் பிராந்தியத்திற்கான இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பான கட்டளைத் தளபதிகள் தங்களுக்குப் பொறுப்பான பிரதேசங்களின் கள மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.
இதன் பின்னர், படையினர் சம்பந்தப்பட்ட விடயங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு, எதிரிகளுடன் போராடும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இராணுவத் தளபதி இதன்போது தேவையான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருக்கிறது.