கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் இடையேயும் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முரண்பாடான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
துணை இராணுவக் குழுவின் தலைவர் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள அமைச்சர்கள் பலர் பிடிவாதமாக உள்ள நிலையில், ஹிஸ்புல்லாவே முதலமைச்சராக வரவேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றைக்காலில் உள்ளனர்.
இதனால், அமைச்சர்கள் மத்தியில் பெரும் முரண்பாடு காணப்படுகின்றது. பிள்ளையானுக்காக முதலமைச்சர் பதவியைக் கோருவது என்பது சிங்கள அமைச்சர்களுக்கு அவசியமற்ற விடயம் என்பது முஸ்லிம் அமைச்சர்களின் வாதமாகவுள்ளது.
அத்துடன், பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமாகவிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரிடும் எனவும் சில முஸ்லிம் அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
முக்கிய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவும் கடந்த 48 மணிநேரமாக அரச தலைவர் செயலகத்திலும் அலரி மாளிகையிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள், ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
இச்சமயம், அமைச்சர்கள் பிள்ளையானை முதலமைச்சராக்க தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும், இது தொடர்பா இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்ற போதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச லண்டனில் இருந்து நாடு திரும்பிய பின்னரே முதலமைச்சர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள கடும் இழுபறி பெரிய பூதாகரமாகி உள்ளதால் கொழும்பில் நடைபெறவிருந்த முதலமைச்சர் பதவியேற்பும் ஒத்திவைக்கப்பட்டலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய வருகின்றது.