கிழக்கு மாகாண சபையின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆராயும் முக்கிய கலந்துரையாடலொன்று மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெறுகின்றது. இது தொடர்பாக மாகாண சபைகள், உள்ளுராட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு கொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது மேல், தென், வட மேல், வட மத்திய, ஊவா, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு, வடக்கு ஆகிய மாகாணங்களின் சுகாதாரத்துறை சம்பந்தமாகவும் எதிர் காலத்தில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலுக்கு சகல மாகாணங்களினதும் சுகாதார, சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர்கள், மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது