நடைபெற்று முடிந்திருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் கூடுதலான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதால் தனக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்துசென்று அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் தனக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமெனவும், முஸ்லிம் சமூகம் கூடுதல் ஆசனங்களைப் பெற்றால் முதலமைச்சர் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதால் தமக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டுமெனவும், அது தொடர்பில் வேறு எந்தக் கேள்விக்கும் இடமில்லையெனவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
ஆறு உறுப்பினர்களை மாத்திரமே பெற்றிருக்கும் பிள்ளையான் அதனைக் கேட்பதற்கு உரிமையற்றவர் எனவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
இதேவேளை, நீண்டகாலமாக கஷ்டங்களை அனுபவித்துவரும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காகவே தமக்கு வாக்களித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், பிள்ளையானுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டுமெனக் கூறியுள்ளனர்.
இதேவேளை முதலமைச்சர் ஆகும் சந்தர்ப்பம் சூடுதலாக ஹிஸ்புல்லாவுக்கே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.