கிழக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கில் யார் முதலமைச்சராக வரப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த விடயத்தில் எமது கட்சிக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. முதலமைச்சராக யார் வந்தாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், அங்கே சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும்.
1971 இல் கிழக்கில் சிங்களவர்கள் இருந்தனர். விடுதலைப் புலிகள்தான் அங்கிருந்து சிங்களவர்களை விரட்டினர். பொத்துவில், புல்லுமலை, தோப்பூர், ஏறாவூர், அக்கரைப்பற்று, கல்முனை, ஜயந்திபுர உட்பட மேலும் பல இடங்களில் இருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு தற்போது வேறு இனத்தவர்களே உள்ளனர்.
அதுமட்டுமன்றி அங்கிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களிலிருந்து சிங்களப் பணியாளர்களும் நீக்கப்பட்டு வேறு இனத்தவர்கள் அந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனவே அங்கே மீண்டும் சிங்களவர்களை குடியமர்த்த வேண்டும். இல்லாவிடின் எமது கட்சி சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றார் அவர்.