ஜனாதிபதி வாக்குறுதியளித்ததன் பிரகாரம் கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நியமிக்க வேண்டும் எனக் கோரும் கடிதம் ஒன்றை முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி, முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிக ஆசனங்களைப் பெற்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான ஹிஸ்புல்லாவையே ஜனாதிபதி முதலமைச்சராக நியமனம் செய்யவேண்டும் என இக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்காவிட்டால் தமது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொள்வது தொடர்பிலும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று மாலை கூடி ஆராய்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. லண்டனிலிருந்து நாடு திரும்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள இக்கடிதத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களென 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், நஜீப் ஏ.மஜீத், எம்.எஸ்.அமீர் அலி, எம்.எச்.மெஹமட், ஏ.எச்.எம்.பௌசி மற்றும் பிரதி அமைச்சர்களான கே.ஏ.பாயிஸ், எஸ்.நிஜாப்முடீன், மயோன் முஸ்தபா, பைசர் முஸ்தபா, ஹுசைன் பைலா ஆகியோர் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அதேவேளை, ஈரான் சென்றுள்ள அமைச்சர் பேரியல் அஷ்ரப் சார்பிலும் அம்பாறையிலுள்ள அமைச்சர் அதாவுல்லா சார்பிலும் அவர்களது பிரதிநிதிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
இக்கடிதத்தின் பிரதியொன்று அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்சதீனுக்கு அனுப்பட்டுள்ள போதிலும் அவர் நேற்று மாலை வரை கடிதத்தில் ஒப்பமிட்டு அனுப்பி வைக்கவில்லை என தெரியவருகிறது.
இதுதொடர்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், அதிக ஆசனங்களைப் பெறும் சமூகத்தின் சார்பில் போட்டியிடும் ஒருவருக்கே கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவியை வழங்குவதென ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். அதற்கமையவே தமிழ் பிரதேசங்களில் பிள்ளையானின் பெயரிலும் முஸ்லிம் பிரதேசங்களில் ஹிஸ்புல்லாவின் பெயரிலும் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், முஸ்லிம்கள் 8 ஆசனங்களை பெற்றுள்ளதால் முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாவுக்கே வழங்கப்படவேண்டும். அதை வலியுறுத்தியே ஜனாதிபதிக்கு மேற்படி கடிதத்தை எழுதியுள்ளோம். ஜனாதிபதியில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை வீண்போகுமானால் எமது அமைச்சுப் பதவிகளை துறப்பததே எமது அடுத்த நடவடிக்கையாக இருக்கும் என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சேகு இஸ்சதீன், இக்கடிதத்தின் பிரதி எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், சிலரது சுய அரசியல் இலாபங்களுக்காக அதில் கையொப்பமிட வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. ஒருவேளை, கையொப்பமிட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவிகளை இராஜினாமா செய்தால், எனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பாகவும் சிந்திப்பேன் என்று கூறினார்.
ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்காவிட்டால் தமது அமைச்சுப் பதவிகளை துறப்பதற்கு முஸ்தீபுகளை மேற்கொண்டுள்ள போதும், அவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திலேயே அங்கம் வகிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.