கிழக்கிலுள்ள மக்களால் வாக்களிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைக்கான உறுப்பினர்களுக்கு கொழும்பில் இருநாள் விசேட செயலமர்வை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்கபண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூடிய உறுப்பினர்களை பெற்றுக்கொள்கின்ற கட்சிக்கே முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது, எனினும் இவ்விடயம் தொடர்பாக உயர்மட்ட ரீதியில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சிமுறையில் வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் ஜனக்கபண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சியில் அடிப்படை, சட்டம், நிர்வாக முறைமை, மக்கள் சேவை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் அங்கு கூறினார்.
முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்துகொள்வது தொடர்பான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென்றும் ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் சத்தியபிரமாணம் வைபவம் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.