மன்னாரில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் மக்கள் படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். படையினரின் அச்சுறுத்தல்களையடுத்து பலர் இடம்பெயர்ந்துள்ளதோடு தமிழகத்துத் தப்பிச்செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன.
அரிப்பு, சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பையடுத்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் முருங்கன், நானாட்டான், உயிலங்கும், வாழ்க்கைப்பட்டான் கண்டல், வங்காலை ஆகிய கிராமங்களில் வசித்துவந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது இப்பகுதிகளில் வசித்து வருபவர்கள் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் அவர்களுக்கும் உதவிசெய்தவர்கள், உடனடியாக சரணடையவேண்டும் என சிறிலங்காப் படையினர் அறிவுறுத்தல், துண்டுப்பிரசுரங்களை இப்பகுதிகளில் வழங்கியுள்ளனர்.
இந்த அறிவிப்பால் அச்சமடைந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாது திண்டாடிவருவதோடு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அத்தோடு தமிழகத்திற்கு பலகுடும்பங்கள் அகதிகளாகச் செல்லத் தொடங்கியுள்ளன. இதுவரை சுமார் 70 குடும்பங்கள் அச்சம் காரணமாக தமிழகம் சென்றுள்ளன எனத் தெரியவருகிறது.