யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இன்று அப்பகுதியில் பாரிய பதற்ற சூழல் நிலவியது.
இன்று புதன்கிழமை காலையில் வல்லைவெளியில் பாரிய சோதனை நடவடிக்கைகளை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர்.
அனைத்து வாகனங்களும் கடுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
இதனால் யாழ்ப்பாணம் நோக்கி வந்த அனைவரும் பெரும் துயரத்துக்குள்ளாகினர்.
இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஈபிடிபி துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தின் உடலம் எந்த அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டது என்ற கேள்வி பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்று நீதித்துறை மற்றும் சிறிலங்கா காவல்துறை சார்ந்தோர் விசாரணைகளை நடத்தாத நிலையில் எந்த அடிப்படையில் அந்த உடலம் அகற்றப்பட்டது என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டம் என்பது யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை சிறிலங்காப் படையினரின் கைகளிலேயே உள்ளதையே இது வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் பொதுமக்கள் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.