இலங்கையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையானது ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான இராணுவச் செலவானது அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் மொப் ரியா தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏற்கனவே யுத்தம் எனும் கொடூரத்துக்குள் மூழ்கியிருப்பதுடன், புதிதாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் செயற்பாட்டுக்கு தடையாக அமைந்துள்ளது என்பதே கனேடிய பாராளுமன்றத்தின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.
1980களிலிருந்து இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதும், விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடா உட்பட பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் பெருந்தொகையான நிதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வருவதாக ரியா சுட்டிக்காட்டியுள்ளார்.
“மோதல்கள் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள் ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான இராணுவச் செலவானது அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.
2007ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் அதற்கு முந்திய வருடத்தைவிட 50 வீதம் அதிகமானது. 2008ஆம் ஆண்டு பாதுகாப்புச் செலவீனம் கடந்த வருடத்தைவிட 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதாவது 1.48 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. அதனைத்துப் பொதுச்செலவுகளைவிட பாதுகாப்புச் செலவீனம் அதிகமாக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என மேலைத்தேய நாடுகள் கூறுகின்றபோதும், அவை இலங்கை அரசாங்கத்துக்கு சிக்கலாக உள்ளது.
இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் ஆயுத உதவிகளைக் கோரியுள்ளது. ஈரான் ஜனாதிபதி அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நாடுகள் இலங்கை ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டுமென வலியுறுத்துவதற்கு விரும்புவதில்லை.
பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை நேரடியாக அந்த நாடுகள் வழங்குகின்றன என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் மொப் ரியா தெரிவித்துள்ளார்.