முஸ்லிம் அமைச்சர்களின் வேண்டுகோளை நிராகரித்து பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முஸ்லிம் அமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார். இதன்போது கிழக்கு முதலமைச்சர் பதவி தொடர்பாக அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஜனாதிபதி தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். தாம் நாட்டுக்கு திரும்பும் முன்னர் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இலங்கைக்கு வந்து ஹிஸ்புல்லாஹ்வையோ அல்லது முஸ்லிம் அமைச்சர்களுடனோ முரண்பட தாம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கான பொருத்தமானவர்.இதனை கருத்திற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் வேறு விடயங்களை கவனிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சராக நியமிக்கப்படாவிட்டால் தாம் பதவி விலக்கப்போவதாக எச்சரித்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள், ஜனாதிபதியுடனான தொலைபேசி கலந்துரையாடலின் போது தமது எச்சரிக்கையை வலியுறுத்தவி;ல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்த அரசாங்க அமைச்சரான டளஸ் அலகப்பெரும, கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் ஹிஸ்புல்லாஹவின் உறுப்பினர்கள் நால்வரும், ஏ எல் எம் அத்தாவுல்லாஹ்வி;ன் மூன்று உறுப்பினர்களும், தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பிள்ளையானின் தரப்பில் இருந்து 6 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் பெரும்பான்மை ஆசனங்களை பெறுபவருக்கு முதலமைச்சர் பதவி என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியின் அடிப்படையில், பிள்ளையானே முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் என தெரிவித்தார்.