தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 60 பேரும் இன்று இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க தெரிவித்தார்.
காங்கேசன்துறையின் வட கடற்பரப்பில் வைத்து இவர்கள் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.
இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததன் காரணமாக கடந்த வாரங்களில், 120 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால், கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் தமிழக காவல்துறையினரால், கைது செய்யப்பட்டிருந்த இன்னும் 45 இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழகத்தின் ராமேஸ்வரம் பிரதேசத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குறித்த ஏதேனும் தகவல்கள் உள்ளதா எனத் அறிவதற்காக இந்திய அதிகாரிகள் இலங்கை கடற்படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கலாமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளமையை அடுத்தே இந்திய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த 5ம் திகதி கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் ஒரு வாரம் வரை கடலில் இருந்து மீன்பிடித்து கரை திரும்புவது வழக்கமான நிலையில் கடந்த 11ம் திகதி கரை திரும்பியிருக்க வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், ராமேஸ்வரம் பிரதேசத்தில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து மீனவர்களைத் தேடும் பணிகளை இந்திய கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் உலங்குவானுர்;த்திகளைப் பயன்படுத்தி மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எதுவிதத் தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கச்சத்தீவு ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என இந்திய கம்ய+னிச கட்சியின் செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மீனவ சம்மேளனங்கள் இணைந்து நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என டி ராஜா குறிப்பிட்டார்.
ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் ,கச்சத்தீவு தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.