கிழக்கில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்கப்படும் நிலையில் முதலமைச்சர் ஆசனத்துக்கு சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவின் பிள்ளையான் நியமிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து கிழக்கில் இனி என்ன நடக்குமோ என்று ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் தெரிவித்திருக்கின்றது.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நௌசாட் இன்று வியாழக்கிழமை கூறியதாவது:
கிழக்கு தேர்தலை பொறுத்தவரை 17 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளனர். எனவே முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும்.
இன்று கிழக்கில் அமைதியான சூழல் இல்லை. கிழக்கிற்கு செல்வதானால் காவல்துறையினரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
முஸ்லிம்கள் இன்று பொறுமையின் எல்லைக்குச் சென்றுவிட்டனர்.
எனவே ஒரு நியாயமான முடிவை அரசாங்கம் வழங்க வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்துள்ள சில முஸ்லிம்கள் இனவாதிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர்.
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கும் நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இது அரசாங்கத்தின் பயங்கரமான விளையாட்டு.
முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டால் முஸ்லிம் அமைச்சர்கள் 12 பேரும் பதவி விலகுவோம் என்று கூறுகின்றனர். இது வெறும் பம்மாத்து. எவரும் பதவி விலக மாட்டார்கள்.
கிழக்கை அரசாங்கம் மீட்டு விட்டதாகக் கூறப்படுகின்ற போதும் அங்கு தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்கின்றன. இனி என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை என்றார்.