வெலிவேரிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் மரணமான அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, நீர்கொழும்பு தேர்தல் தொகுதி மக்களுக்கு ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகருதி பிரதியுபகாரம் தெரிவிக்கும் வகையில், நீர்கொழும்பு நகரில் அமைச்சரின் உருவச்சிலை அமைப்பதற்கு நீர்கொழும்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் உள்ளக விளையாட்டரங்கிற்கு அமைச்சரின் பெயரை சூட்டுவதெனவும் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
மேயர் நிமல்லான்ஸா சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அரசியல் தலைவர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆவார். அவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் பல மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு காரணமாக இருந்தார். நீர்கொழும்பு தேர்தல் தொகுதி மக்களுக்காக அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்கு நன்றியும் பிரதியுபகாரமும் தெரிவிக்கும் வகையிலேயே இப்பிரேரணையை நான் முன்வைத்துள்ளேன்.
நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளக விளையாட்டரங்கிற்கு "ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளக விளையாட்டரங்கு ' எனப் பெயரிடப்பட வேண்டும் எனவும், நகரில் பொருத்தமான இடமொன்றில் அமைச்சரின் உருவச்சிலை ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் சபையில் பிரேரணையை முன்வைக்கின்றேன் என்றார்.
ஆளும் எதிர்தரப்பு உறுப்பினர்களான அன்ரனி ஜயவீர, செல்டன் பம்பரத்த, யூட் அன்ரனி பெர்னாண்டோ, கே. கிரிஸ்டி பெர்னாண்டோ, பிரதீப் பீரிஸ் ஆகியோர் இப்பிரேரணை தொடர்பாக உரையாற்றிய பின்னர் சபையில் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.