இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் சிக்குன்குன்யாமற்றும் வைரஸ் காரணங்களினால் மாணவர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதே நிலை மேலும் தொடருமாயின் மேற்படி மாணவர் வரவில் வீழ்ச்சியான பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
இப்பகுதி பெரும்பாலான பாடசாலைகளில் இத்தகைய மாணவர் வரவு வீழ்ச்சி நிலைகுறித்து முதலமைச்சரிடம் வினாவியபோது அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் பரவும் வைரஸ் காய்ச்சல், சிக்குன்குன்யா என்பவற்றுக்கு சுகாதாரத் தரப்புக்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் பலாங்கொடை வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளில் கடந்த வாரத்தில் சுற்றாடல் சுத்தமும் இடம்பெற்றது. இதற்கு இரத்தினபுரி மாவட்ட கல்விப் பணிப்பாளர் எம்.வீ. ஜயசிங்க உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் எஹலியகொடை, குருவிற்ற கிரியெல்ல, எம்பிலிப்பிட்டிய, நிவித்திகல, பல்லெபெத்த, கொடக்கவௌ போன்ற பகுதிப் பாடசாலை மாணவர்கள் இந்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது