கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி பெரும்பான்மை மக்களின் மனதை வெற்றிகொண்ட ஒருவருக்கே வழங்கப்படும். இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை. இங்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதப் பிரச்சினையே நிலவிவருகின்றது இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்ற கருத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தோல்வியை தழுவிக்கொள்கின்ற போது சர்வதேச சமூகம் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது இயல்பாகும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு நாம் இடமளிக்கபோவதில்லை வடக்கினை மீட்கும் நடவடிக்கை கைவிடப்படமாட்டாது வடக்கு மாகாண சபையினை ஏற்படுத்துவதற்காக வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
கேசரிக்கு இன்று வியாழக்கிழமை அளித்த விஷேட பேட்டியிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார் பேட்டியின் விபரம் வருமாறு;
கேள்வி; இலங்கை பிரச்சினைக்கு இராணுவ தீர்வு சாத்தியமற்றது என சர்வதேச சமூகம் எதிர்வுகூறியுள்ள நிலையில் இராணுவ நடவடிக்கையின் மூலமாக பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமாகுமா?
பதில்; நாட்டில் இனப்பிரச்சினையொன்று இருக்கின்றதா? இந்த பிரச்சினை உண்மையில் இனப்பிரச்சினையா? நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத பிரச்சினையே இருக்கின்றது. இனப்பிரச்சினையாக இருந்தால் இனங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டிருக்கவேண்டும். இனங்களுக்கிடையில் பிரச்சினையில்லை சட்டத்தை பலவந்தமாக கையிலெடுத்துகொண்ட பிரிவினர் முழு தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதியாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்கின்றனர். பயங்கரவாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என்பதை நான் நீங்கள் மட்டுமல்ல கிழக்கு மக்கள் மாகாண சபைத்தேர்தலில் நிரூபித்துள்ளனர். இவ்வாறா நிலையில் இலங்கையில் இனப்பிரச்சினையே இருக்கின்றது என்பதை நானோ அரசாங்கமே ஏற்றுக்கொள்ள போவதில்லை.
கேள்வி; பயங்கரவாதிகளை இராணுவ நடவடிக்கைகயின் மூலம் முழுமையாக தோற்கடிப்பதற்காக அரசாங்கம் படைநடைவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில் சர்வதேச சமூகம் மனித உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கையை நீட்டுகின்றது அல்லவா?
பதில்; சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது இது இலங்கையின் பிரச்சினை புலிகள் தோல்விகளை தழுவுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சர்வதேச சமூகம்,சமாதான பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துவந்திருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களின் மூலமாக அவ்வாறானதொரு குழிக்குள் அரசாங்கம் மீண்டும் விழுந்துவிடாது. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் முன்னர் பயங்கரவாத்தை அழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இடைநடுவில் கைவிடப்பட்டன அதன் மூலமாக புலிகள் பலம்பெற்று மீண்டும் பங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இது வரலாற்றில் நாம் கற்றுக்கொண்ட பாடமாகும் அதனால் மீண்டும் அவ்வறானதொரு தவறை செய்வதற்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை