ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (16.05.08) வெளிவந்த அந்த ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் 21 ஆம் நாள் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா தனது இடத்தை அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தக்க வைக்கும் இறுதிக் கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.
அனைத்துலக அரங்கில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள சிறிலங்கா தனது செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடத் தயாராக இல்லாத நிலையில் மனித உரிமைக் குழுவில் தனக்கான இடத்தைத் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளமை வியப்பூட்டுவதாக உள்ளது.
சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம நியூயோர்க் சென்று நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் முகாமிட்டு தமது முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் தன் பங்கிற்குக் களத்தில் இறங்கி பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கருணா விடயத்தில் தோன்றியுள்ள நிலைமையைச் சமாளித்து அவரை மீட்டு வரும் முயற்சியில் ஈடுபடுவதற்கே அவர் பிரித்தானியாவுக்குச் சென்றிருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப் பட்டுள்ள போதிலும் கூட, அதற்கும் அப்பால் மனித உரிமைக் குழுவின் உறுப்புரிமைக்கான தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்கும் இப் பயணத்தைப் பாவிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
எனினும், செல்லும் இடமெல்லாம் அவர்கள் பலத்த கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் குழுவின் அனைத்துலக கிரம மீளாய்வுக் குழுக்கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த சமரசிங்கவை டென்மார்க், அயர்லாந்து, பிரித்தானியா, கனடா, யேர்மன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்கள்.
தனது உதவிக்கு அழைத்து வந்த சட்டமா அதிபர் உள்ளிட்ட பரிவாரங்களின் அனுசரணையுடன் முடிந்தவரை கூறக்கூடிய பொய்களைக் கூறிச் சமாளிக்க முயன்றுள்ளார் மகிந்த சமரசிங்க. அவரது முயற்சி வெற்றி அளித்துள்ளதா என்பதை 21 ஆம் நாளே கண்டறிய முடியும்.
இதேவேளை, உலக நாடுகளைத் தவிர மனித உரிமைகளுக்காகக் குரல் தரும் அனைத்துலக அமைப்புக்களும் சிறிலங்கா அரசு மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன இது விடயத்தில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
எனினும், இந்த முயற்சிகள் சிறிலங்கா மீண்டும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இடம் பிடிப்பதைத் தடுத்து விடுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வழங்கப்படும் வரிச்சலுகை நிறுத்தப்படப் போவதாக அண்மையில் பல செய்திகள் வெளிவந்த போதிலும் கூட அவற்றை அடுத்த மூன்று வருடங்களுக்கு நிபந்தனையுடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் சம்மதம் தெரிவித்திருந்தது.
இதனைப் போன்றே மனித உரிமைக்குழு நியமன விவகாரத்திலும் இடம்பெற்று விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைக்குழுவில் சிறிலங்கா மீள் நியமனம் கோரி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற மிக மோசடிகள் நிறைந்த ஒரு தேர்தலை நடாத்தி முடித்திருக்கின்றது சிங்கள அரசு. அதே நேரம், கொழும்பு நகரச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் எதுவித முன்னறிவித்தலும் இன்றி பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆக்கப்பட்டுள்ளதான தகவல்களும் வெளிவந்துள்ளன.
விடுதலைப் புலிகளுடன் இனி எக்காலத்திலும் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளப் போவதில்லை என சிறிலங்காப் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியதன் மூலம் சமாதானத்துக்கு இனி சிறிலங்காவில் என்றுமே இடமில்லை என்பதனைத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பின்னணியில், சிறிலங்கா ஐ.நா. மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. உலக நாடுகளும், அனைத்துலக மனிதநேய அமைப்புக்களும் அதனைப் பார்த்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்படன் நாம் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் எமது வரலாற்றுக் கடமையில் இருந்து பிறழ்ந்தவர்களாய் ஆவோம்.
எனவே சிந்திப்போம்! விரைந்து செயற்படுவோம்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.