சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தின் தென்பிரதேசமான சிறிலங்காவின் கிழக்கில் நடத்தியுள்ள தேர்தலின் சதி நோக்கத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (09.05.08) வெளிவந்த "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது இதழின் ஆசிரியர் தலையங்கம்:
இந்தத் தாயக பூமியில் தேசியத் தனித்துவத்துடன் வாழும் அரசியல் அபிலாசையை இலக்கு வைத்தே தமிழரின் விடுதலைப் போராட்டம் நடைபெறுகின்றது.
இந்த விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகத் தமிழரின் தாயகக் கோட்பாடு உள்ளது.
இந்தத் தாயகப் பூமியைச் சிதைத்துத் தமிழரின் தேசியத்தைக் கருவறுக்கச் சிங்கள அரசு விடாப்பிடியாகச் சதிகள் பல செய்து வருகின்றது.
தமிழினப் படுகொலை என்ற நாசகாரத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்ப்படுத்தச் சிங்கள அரசு தேர்ந்தெடுத்த முதல் இலக்குத் தமிழரின் தாயக நிலமாகும்.
இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரம் சிங்களவரின் கைகளிற்கு மாறிக்கொண்டிருந்த அந்தக் கால கட்டத்திலேயே தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்து நில அபகரிப்பைச் சிங்கள ஆட்சியாளர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அந்த நில அபகரிப்பு இன்றுவரை தொடர்கின்றது.
கிழக்கு மாகாண நிலமே சிங்களப் பேரினவாதிகளின் பிரதான குறியிலக்காக உள்ளது. முதலில் கிழக்கு, பின்னர் வடக்கு என்ற சிங்கள இனவாதிகளின் நில அபகரிப்புக் கோசம் பிரசித்தமானது.
கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும் தமிழர் தாயகத்தின் தென்பகுதியில் விவசாயக் குடியேற்றங்கள் என்ற பெயரில் சிங்களவர்களைக் குடியமர்த்தி- அப்பகுதியின் இன விகிதாசார நிலையைத் தலைதூக்கி, இறுதியில் சிங்களவர் நிலமாகக் கிழக்கு மாகாணத்தை உருவாக்கச் சிறிலங்கா அரசு எத்தனிக்கின்றது.
சிங்களக் குடியேற்றங்கள் மூலமான இந்த நில அபகரிப்பு முயற்சி மண்பறிப்பு என்ற அம்சத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழர் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடி, தமிழரின் தாயகக் கோட்பாட்டை வலுவாக்கச் செய்விக்கும் அம்சத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செய்கின்றனர்.
வடக்கு - கிழக்கு நிலத் தொடர்ச்சியைத் துண்டாடித் தமிழர் தாயகத்தை வடக்கொன்றும் கிழக்கொன்றும் பிரிக்க ஒரு சிங்களக் குடியேற்றம். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழரின் நிருவாக மாவட்டங்களை நிலத் தொடர்ச்சியில்லாமல் துண்டாடிச் சிதைக்கச் சில சிங்களக் குடியேற்றங்கள்... என்று சிங்கள ஆட்சியாளர்களின் சதித்திட்டம் நீளுகின்றது.
இதன் தொடர்ச்சியாகக் கிழக்கு நிலத்தை இலக்குவைத்து மாகாண சபைத் தேர்தல் என்ற வடிவத்தில் சதி முயற்சியில் இப்போது மகிந்த அரசு ஈடுபட்டுள்ளது.
கிழக்கில் ஒரு பாரிய படையெடுப்பைச் செய்து- தமிழ் மக்களைக் குடியெழுப்பிக் கலைத்து- அவலங்களை விதைத்து அந்த நிலத்தைச் சிங்களப் படைகள் ஆக்கிரமித்தன. இப்போது அந்த நிலத்தின் அரசியல் உரிமையைக் கையிலெடுக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் முனைகின்றனர்.
தமிழரின் தேசியத்திற்குத் துரோகமிழைத்தபடி - சிங்கள ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக - துணை இராணுவக் குழுக்களாகச் செயற்படும் தமிழ்க் குழுக்களைத் தேர்தலில் நிறுத்தி - மக்களை மிரட்டி வாக்குப் போடவைக்கும் ஜனநாயக விரோதச் செயலை மகிந்த அரசு செய்கின்றது.
இந்தத் தமிழ்த் துரோகிகளைத் தமிழரின் அரசியல் பிரதிநிதிகள் போல் காட்டி - கிழக்கு நிலத்திலுள்ள பேரினவாத நலனை அடையச் சிங்கள ஆட்சியாளர்கள் முனைகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கிழக்கு அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு உதவிகளைப் பெற்று - அந்த நிதியை - தமிழருக்கு எதிரான போருக்குத் திருப்பிவிடும் திட்டத்துடனும் சிங்கள அரசு உள்ளது.
மகிந்த அரசு நடாத்தத் துடிக்கும் இந்த (கிழக்கு) மாகாண சபைத் தேர்தலின் சதி நோக்கத்தையும் - அதன் விளைவுகளையும் உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று புலிகள் இயக்கம் கோருகின்றது.
தமிழரின் தாயக நிலத்தைச் சிதைக்கச் சிங்கள அரசு எடுக்கும் இந்த ஜனநாயக விரோத முயற்சி தமிழ் - சிங்கள இனப் பிணக்கை மேலும் சிக்கலாக்கி விடவே உதவும் என்பதையும் உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.