பொத்துவில் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முச்சக்கரவண்டியால் மோதுண்டு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையால் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் இரு பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர்.
பொத்துவிலில் நேற்று முன்தினம் மாலை மதுபானப் போத்தல்களை ஏற்றிக்கொண்டுவந்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த முச்சக்கரவண்டி தப்பிச்சென்றுவிட்டது.
பின்னர் பானம பொலிஸ் காவலரண் பகுதியில் இந்த முச்சக்கரவண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றநிலை உருவானது.
அங்கு ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாந்த ராஜபக்ஷவினால் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த முச்சக்கரவண்டியையும் சாரதியையும் வைத்தியர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த முற்பட்டபோது அங்கு பதற்றநிலை உருவானதுடன் ஐநூறுக்கும் அதிகமான மக்கள் கூடி பொலிஸாரையும் முச்சக்கரவண்டியையும் சுற்றிவழைத்து வைத்தியரிடம் ஆஜர்ப்படுத்த விடாமல் தடுத்துள்ளனர்.
இதனால், ஆகாயத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஏற்பட்ட குழப்பநிலையிலேயே விசேட அதிரடிப்படை வீரரொருவரும் இரு பொதுமக்களும் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ சாரதியையும் ஊர்காவல் படையைச் சேர்ந்த மூவரையும் விசேட அதிரடிப்படையினர் இருவரையும் கைதுசெய்து பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபரை விடுதலை செய்யுமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இரு விசேட அதிரடிப்படையினரும் இரு பொதுமக்களும் பானம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிவிகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது அப்பகுதியில் அமைதிநிலை ஏற்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.