சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஹில்டன் விடுதிக்கு முன்பாகவுள்ள வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று பிற்பகல் 12.05 மணிக்கு குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 6 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 90 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேருந்தை இலக்கு வைத்தே இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
காவல்துறையினரை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றின் மீது முச்சக்கர வாகனம் மோதியதனை அடுத்தே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் சிலர் காயமடைந்து வீழ்ந்து கிடந்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
குண்டுவெடித்த பகுதி பிரமுகர்களின் நடமாட்டம் அதிகமுள்ள இடமாகும்.
குண்டுவெடித்த பகுதியில் பதற்றநிலை காணப்படுவதாகவும் அப்பகுதியில் படையினரும் வான்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குண்டுவெடிப்பு குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:
புறக்கோட்டை சம்போதி விகாரையை அண்மித்துள்ள பகுதியில் பிற்பகல் 12 மணிக்கு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சேத விபரங்கள் உடன் தெரியவரவில்லை என்றார்.
சம்பவத்தில் காயமடைந்த 90 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.