இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வரும் மக்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
இந்த மக்கள் எதிர் நோக்குகின்ற அடிப்படை பிரச்சனைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று மன்னார் சகவாழ்வு மன்றத்தில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் தரப்பினருக்கும் மன்னாரில் மனித நேய பணிகளில் ஈடுபடுகின்ற அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கும் இடையே இடம் பெற்ற இந்தக கலந்துரையாடலில் முகாம்களில் வாழுகின்ற மக்கள் தற்போது எதிர் நோக்கி வருகின்ற அனைத்து விதமான பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் கலந்துரையாடலில் இனம் காணப்பட்ட முக்கிய விடயம் தொடர்பாக ஜெனிவாவில் உள்ள மனித உரிமையகத்தில் இடம் பெற இருக்கும் இடம் பெயர்ந்தோர் தொடர்பான விவாதத்தில் முன் வைக்கப்பட இருப்பதாக சகவாழ்வு மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு கு.மைக்கல் ரியூட்டர் தெரிவிக்கின்றார்
கடந்த வருடம் இறுதி தொடக்கம் மன்னார் பகுதிகளில் இடம் பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் மோதல் சம்பவங்கள் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலும் பொது இடங்களிலும் வசித்து வருகின்றனர்