பொலிஸாரினதும் பொதுமக்களினதும் உயிர்களை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் கொழும்பு, கோட்டையில் நடத்திய தற்கொலை குண்டுத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
இக்குண்டுத்தாக்குதலை கண்டித்து மொரோக்கோவில் இருந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்திலிருந்து இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முற்றாக தோல்வியுற்றுள்ள பயங்கரவாதிகளின் மிகவும் ஆபத்தான ஒரு சமிக்ஞையே கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதலாகும்.
இவ்வாறான எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணிந்து போகாது. அத்துடன், நாட்டின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படும். தமிழீழ விடுதலைப் புலிகளின் உண்மையான நிலைப்பாட்டினை சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. அதாவது, ஜனநாயகம், இன பன்மைத்துவம் என்பவற்றை புலிகள் உண்மையிலேயே அலட்சியம் செய்கின்றனர் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.