வவுனியா பசார் வீதியில் படையினர் பயணம் செய்த இராணுவ கவச வாகனம் ஒன்றின் மீது இன்று காலை 11 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
கவச வாகனத்தின் மீது பட்ட கைக்குண்டு கீழே வீழ்ந்து வெடித்ததில் அவிடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதி ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் வந்து நின்ற பஸ் ஒன்றில் இருந்த பிரயாணிகளில் பலரும், அந்த வேளையில் வீதியில் சென்றவர்களும், அருகில் இருந்த கடைகளில் இருந்த சிலருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இராணுவ வாகனத்திற்கோ அதில் இருந்த படையினருக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசாரும் இராணுவத்தினரும் வீதியை மூடி போக்குவரத்துக்களைத் தடைசெய்து தேடுதல் நடத்தினர். காயமடைந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் படு காயமடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்