சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமோ அல்லது வேறு ஒரு முஸ்லிம் உறுப்பினரோ கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக நியமிக்கப்பட்டால் அதற்கு நிச்சயமாக ஆதரவு வழங்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழிகளை அவர் மீறியிருப்பதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
முஸ்லிம் பிரதிநிதிகள் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனக்கு முதலமைச்சர் பதவியும், தமிழ் பிரநிதிகள் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியும் வழங்கப்படுமென ஜனாதிபதி சர்வதேசம் அறிவதற்குக் கூறியிருந்ததாகவும், எனினும், அந்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியிருப்பதாகவும் பி.பி.சி. செய்திச் சேவைக்கு ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
பிள்ளையானை முதலமைச்சராக நியமிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி தன்னிடம் நேற்றுக் காலை கூறியதாகவும், எனினும், அதனை ஏற்றுக்கொள்ளமுடியாதென்பதால் தான் உட்பட மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் தனித்துச் செயற்படுவதாகக் கூறி கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று இனங்களுக்கும் சுழற்சிமுறையில் முதலமைச்சர் பதவி வழங்குவது பற்றி ஜனாதிபதி தன்னுடன் கலந்துரையாடியதாக பி.பி.சி. செய்திச்சேவைக்குக் கூறியிருந்த ஹிஸ்புல்லா, அவ்வாறு சுழற்சிமுறையில் முதலமைச்சர் பதவி வழங்குவதாயின் முதலில் தனக்கே வழங்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் ஏமாற்றப்படலாமென அவர் கூறினார்.
கிழக்கு மாகாணசபையில் தற்பொழுது ஆளும் கட்சிக்கு 17 ஆசனங்களும், எதிர்க்கட்சிக்கு 15 ஆசனங்களும் உள்ள நிலையில் முதலமைச்சர் பிள்ளையானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதற்கு ஆதரவு வழங்குவது பற்றி இன்னமும் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18 ஆசனங்களைப் பெற்றதுடன், இரண்டு மேலதிக ஆசனங்கள் உள்ளடங்களாக 20 ஆசனங்களைப் பெற்றிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து 15 ஆசனங்களையும், ஜே.வி.பி. ஒரு ஆசனத்தையும், தமிழ் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு ஒரு சானத்தையும் பெற்றிருந்தன.
ஹிஸ்புல்லா உட்பட மூவர் தனித்துச் செயற்பட தீர்மானித்துள்ள நிலையில் கிழக்கு மாகாணசபையில் அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா தலைமையிலான மூவரும் எதிர்க்கட்சிக்குச் சென்று மேலும் ஒரு உறுப்பினரை எதிர்க்கட்சித் தரப்புக்கு இழுத்துக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு அரசியல் அவதானிகள் கூறியுள்ள அதேவேளையில், எதிர்க்கட்சியிலிருந்து சகோதரர் ரவூப் ஹக்கீம் அல்லது வேறு ஒரு முஸ்லிம் பிரதிநிதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டால் அதற்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாக ஹிஸ்புல்லா பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியிருந்தார்.