இலங்கையில் செயற்பட்டுவரும் செய்தி இணையத்தளச் சேவைகளைக் குழப்பும் நோக்கில் 'துருவிகள்' (hackers) செயற்பட்டு வருவது குறித்து ஊடக வட்டாரங்களில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக செய்தி இணையத்தள சேவைகள் சிலவற்றை இனந்தெரியாத துருவிகள் சட்டவிரோதமாக இயக்கியிருப்பதாக ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றின் 24 மணித்தியால இணையத்தளச் செய்திச் சேவையும் துருவிகளால் இடையூறுவிளைவிக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றிதொடர்பாக ஏற்படுத்தப்பட்டிருந்த வாசகர்களின் கருத்துக் கணிப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக துருவிகளால் கூடுதலாக வாக்களிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த இணையளத்தளம் தனது பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
மற்றுமொரு ஆங்கிலப் பத்திரிகையொன்றின் செய்தி இணையத்தளமும் துருவிகளார் சட்டவிரோதமான முறையில் இடையூறு விளைவிக்கப்பட்டதாக அந்தப் பத்திரிகை தனது முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் தமது இணையத்தளம் துருவிகளால் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கொழும்பிலிருந்து செயற்படும் மற்றுமொரு ஆங்கில செய்தி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக அந்த இணையத்தளம் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரியவுக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இலத்திரனியல் ஊடகங்களைக் கண்காணிக்கும் பிரிவொன்றை பாதுகாப்பு அமைச்சு அண்மையில் ஆரம்பித்து இலங்கை செய்திகள் தொடர்பாக இணையத்தளங்கள் வெளியிடும் தகவல்களை அவதானித்து வருவதாகவும் அந்த இணையத்தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.