ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 முஸ்லிம் அமைச்சர்களுடன் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர சந்திப்பை மேற்கொண்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் அதிபர் மாளிகையில் இச்சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ச லண்டனுக்குச் சென்றிருந்த வேளை, கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படாவிட்டால், அரசாங்கத்திற்கு எதிராக பாரதூரமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இக்கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. சந்திப்பின்போது மகிந்த ராஜபக்ச தெரிவிக்கையில், ” இங்கே புடவைக் கடை வியாபாரம் செய்யவில்லை. விரும்பினால் எங்களோடு இருங்கள் இல்லாவிட்டால் வெளியேறுங்கள்” என முஸ்லிம் அமைச்சர்களைப் பார்த்து ஆவேசமாப் பேசினார். சிறீலங்கா அதிபரின் ஆவேசப் பேச்சை அடுத்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் அமைதி காத்து தலையைக் குனிந்து இருந்தார்கள் என சிறீலங்கா அரச அதிபர் மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.