மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவுப் பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தினமும் இரவுநேரம் பொலிஸ் வாகனத்தில் நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு அப்பாவி இளைஞர்களை எதுவித குற்றமும் இன்றி கைது செய்துவருவதாக மாத்தறை மாநகர சபையின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவர் இந்த இளைஞர்களின் பொக்கற்றில் கஞ்சாவை வைத்துவிட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தடுத்துவைத்து மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு அபராதமும் தண்டனையும் பெற்றுக்கொடுக்கிறார்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முகமட் சபார் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாத்தறை மாநகர சபையின் மே மாதக் கூட்டம் வலகம சிறுவர் நூலக மண்டபத்தில் நடைபெற்றபோது உறுப்பினர் முகமட் சபார் இவ்வாறு கூறினார்.
இந்த பொலிஸ் அதிகாரி தனது பதவி உயர்வுக்காகவும் பொலிஸ் துறையில் தனக்கு நல்ல பெயரும் புகழும் வரவேண்டும் என்பதற்காகவுமே இவ்வாறு செயற்பட்டு வருகிறார் எனவும் குறிப்பிட்ட அவர், வீதிகளில் நின்று கதைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை கைதுசெய்வதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு இந்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டுவருவதால் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் எதிர்காலத்தில் இக்குற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும், எனவும் சுட்டிக்காட்டி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்.எம். நபவியும் இதனை ஆதரித்துப் பேசினார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாத்தறை மாநகர சபை மேயர் உப்புல் நிசாந்த தெரிவித்தார்.