கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டமையை அடுத்து கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காத்தான்குடியில் பிள்ளையானின் பதவியேற்புக்கு எதிராக ஹர்த்தாலை மேற்கொள்ளுமாறு “முஸ்லிம் சமூகம்” என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள் வெளியி;டப்பட்டன.
இதனையடுத்து முஸ்லிம்களின் வியாபார தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. எனினும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து ஹர்த்தால் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதேவேளை சம்மாந்துறை பகுதியில் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்று பேரூந்து ஒன்று நிறுத்தப்பட்ட சில தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனினும் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.கிழக்கு மாகாணத்தில் நீண்ட நாளாக நிலவி வந்த தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் தகர்த்துள்ளதாக மக்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
தமிழ் மற்றும் முஸ்லிம் முதலமைச்சர்கள் என்ற நிலைப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் இரண்டு சமூகங்களையும் பிரித்து வடக்குகிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்று சேர்வதை இதன் மூலம் மஹிந்தவால் தடுக்கமுடிந்துள்ளது. இதற்கு பிள்ளையான் மற்றும் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மஹிந்த ராஜபக்சவுக்கு துணைபோயுள்ளனர் என்ற கருத்துக்கள் சுயாதீன சிந்தனையாளர்களிடம் எழுந்துள்ளன. எனவே பெரும்பான்மையினால் சிறுபான்மையினர் அடக்கப்பட்டதாக கூறப்படும் கருத்தை மறைத்து தமது பிரித்தாளும் உத்திக்கு பிள்ளையானும், ஹிஸ்புல்லாஹ்வும் முழு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை அடகு வைத்துள்ளதாக சுயாதீன சிந்தனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்