கடத்தல், காணாமல் போதல், கைதுகளால் தமிழ் மக்களின் இயல்பான வாழ்க்கை நிலை பெரும் சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. சிறைச்சாலைகளிலும், பூசா தடுப்பு முகாமிலும், இரகசிய பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு, குற்றத் தடுப்புப் பிரிவு
இரகசியப் பொலிஸ் பிரிவு உட்பட நாடெங்கும் உள்ள 401 பொலிஸ் நிலையங்களிலும் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது பாரிய மனித உரிமை மீறல்களுக்கே வழிவகுக்குமென பிரதி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொழும்பு 14 இல் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் மக்கள் பணியகத்தில் நடைபெற்ற காணாமல் போதல், கைது, கடத்தல் தொடர்புகளால் பாதிக்கப்பட்ட உறவினர்களுடனும் உடன் பிறப்புகளுடனும் பெற்றோர்களுடனும் நடத்திய சந்திப்பிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2006,2007 ஆம் ஆண்டுகளில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அநேகமான பெற்றோரும் உறவினர்களும் எதுவித தகவல்களையும் பொலிஸாரிடம் பெற முடியாமல் இருப்பதாக தெரிவித்ததுடன் காணாமல் போன ஒருவரையாவது பொலிஸாரோ, சம்பந்தப்பட்ட நலன்புரி அமைப்புகளோ, அரசியல்வாதிகளோ கண்டுபிடிக்க முடியாத அவல நிலை இந்த வருடமும் நீடிப்பதைக் கண்ணீருடனும் விசனத்துடனும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, புத்தளம், கொழும்பு பகுதிகளில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் உயர் அதிகாரிகளின் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
பூசா முகாமிலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் கொடூரமான மனிதாபிமானமற்ற இம்சைகள் செய்வதாகவும், தினசரி தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உணவு மருந்துகளில் பாரபட்சத்துடன் தடைவிதித்து வருவதாகவும் தெரிவித்ததுடன், பூசா முகாமிற்கு பிள்ளைகளை பார்வையிடுவதற்கு சிரமங்களுக்கு மத்தியில் வருகை தரும் வட கிழக்கு தாய்மார்களை சோதனை என்று கூறி நேரவிரயத்தை ஏற்படுத்தி பார்வையிட அனுமதிக்காமல் தேவைப்படாத ஆவணங்களைக் கொண்டு வரும்படி கூறுவதாகவும் அவர்கள் பிரதியமைச்சரிடம் முறையிட்டனர்.
பெற்றோரின் துயரக் கருத்துக்களை செவிமடுத்த பிரதி அமைச்சர் தனது உரையில் கூறியதாவது;
வெள்ளை வானில் பொலிஸாரே தமிழர்களைக் கடத்திச் செல்வதாக பல புகார்கள் கிடைத்துள்ளன. சில கடத்தல்களில் பொலிஸ் இராணுவ சீருடைக்காரர்களே ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. இவைகளை பொலிஸ் மா அதிபரோ, இதர பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களோ ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தெளிவாகக் காட்டுகிறது.
வெள்ளவத்தை வழிப்பறியில் ஈடுபட்ட பிலியந்தலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பி.டி.ஹரத், டி.என்.விஜயநாக என்பவர் கைது செய்யப்பட்டிருப்பது புனிதமான பணிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக பொலிஸ் தலைமைப்பீடம் வருத்தப்பட்டாலும், தமிழர்களிடம் நடத்தப்படும் சட்ட மீறல்களும், பணிப்பறிப்பும் தடுக்காமல் இருப்பது கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸார் மூவர் தமிழ்ப் பெண்ணிடம் கப்பம் பெற முற்பட்ட போது கைதானதைப் போல பொலிஸார் குறித்து புகார்கள் தெரிவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாதுகாப்பு அமைச்சை வலியுறுத்தி வருகின்றோம்.
என்னிடம் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரை கடத்தல் மூலம் காணாமல் போன 93 பேர் தொடர்பாக புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் மார்க்கண்டு சுமன், பத்மநாதன் ஜெய்ஸ், சித்திரவேல் சிவானந்தன், கார்த்திகேசு சிவாஜி, வேலமுத்து ரோஸ்மேரி, வேலமுத்து நித்தியாயினி, பச்சைக்கனி சண்முகநாதன், தம்பாப்பிள்ளை கஜன், கணேசன் செல்வராஜன், சிவலிங்கம் ஆரூரன், ரபால் பெர்ணாட், தோமஸ் அன்டன் ஜோர்ஜ் ஆகியோர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர எஸ்.அசோகரன், வேலாயுதம் ரவீந்திரன், சிவலிங்கம் ராஜ்குமார், வரதராசன் பரமானந்தன், முத்தையா அரசரட்ணம், ராகுல் சந்திரசேகரன், வெள்ளசாமி ஜெகன், சின்னையா செல்லையா, ஜோதிஸ்வரன் சிவானந்தகுமார், கிருஷ்ணபிள்ளை வசந்தா, சுப்பிரமணியம் சத்தியகுமார், கோவிந்தசாமி நாகநாதன், மோகனதாஸ் விஜயராணி, அன்டனி ஜெக்சன், இசான் மொகமட் சலீம், ராமசாமி தேவதாஸ், எம்.சிவா, சங்கரன் தேவதாஸ், ஏகாம்பரம் பிள்ளை விஸ்வநாதன், ஜோசப் நவரட்ணம் ஜெய்ஸ், சீனித்தம்பி சுபாகரன் ஆகிய 22 பேர் கடத்தப்பட்டவர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
மிகுதியான 61 பேர் பற்றி எதுவித தகவல்களையும் பெற முடியாத சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
தற்போது 9 பெண்கள் உட்பட 192 பேரும், கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் 13 பெண்கள் உட்பட 98 பேருமாக 290 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்குத் தேவைப்படுவோரை கைது செய்வதை விடுத்து வெள்ளை வானில் கடத்துவதை நியாயப்படுத்த முடியாது.
அரசுடன் இணைந்துள்ளோம் என்பதற்காக தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்கும் கடத்தல்களுக்கும் எதிர்ப்புக் காட்டாமல் இருக்க முடியாது.
பதவிகளுக்குப் பயந்து தமிழர்களின் உரிமை பறிபோவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மனித உரிமை மீறல்களால் சர்வதேசம் நமது நாட்டைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதை அரசும், பொலிஸாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அநாவசியமாக மலையக இளைஞர்களை வெளிவேரிய பிலியந்தலைப் பகுதிகளில் கைது செய்துள்ளதாக 30 க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன. சில அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு புலிச்சாயம் பூசுவதற்கு பிரயத்தனம் செய்து வருவதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நாடெங்கும் படுகொலை இடம்பெறாத தமிழ் குடும்பமோ கைது செய்யப்படாத தமிழ் குடும்பமோ இல்லை என்ற ரீதியில் கொலையும் கடத்தலும் கைதும் இடம்பெற்று வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
விரைவில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே போல அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும் பொலிஸ் அதிபரையும் சந்திக்கவும் ஏற்பாடாகியுள்ளது.
தமிழர்களைக் கடத்தும் பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் கொடுப்போம். இல்லையேல் அரசியல் ரீதியான சில கடும் தீர்மானங்களையும் எவருக்கும் அஞ்சாமல் எடுப்போம்.
கடத்தப்பட்டவர்களின் விபரக் கொத்து ஒன்றை வெளியிடுவதற்கும் சிலரை தடுத்து வைப்பதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெகு விரைவில் பொதுவான தீர்க்கமான முடிவுகளை தமிழர்களின் நலனுக்காக எடுப்போம்.