கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியமனம் தொடர்பில் எடுத்த முரண்பாடு காரணமாக ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா தலைமையிலான மூன்று உறுப்பினர்கள் தனித்து செயற்படப் போவதாக அறிவித்ததையடுத்து கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்தின் பெரும்பான்மை கேள்விக் குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 20 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், 15 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியும், தலா ஒவ்வொரு உறுப்பினர்களை ஜே.வி.பி.யும் தமிழ் ஜனநாயக கூட்டணியும் பெற்றிருந்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் மூவர் ஹிஸ்புல்லா தலைமையில் தனித்து செயற்பட முடிவு செய்தமையினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றால் மட்டுமே முதலாவது சபை அமர்வின்போது பெரும்பான்மையினை அரசாங்கம் நிரூபிக்க முடியும்.
இந்த நிலையில், பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு உறுப்பினர்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் உயர் மட்டத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணியின் உறுப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னுமொரு உறுப்பினரின் ஆதரவினை ஆளும்தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.