மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் பி.மெளனகுருசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவுடன் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட பி.மெளனகுருசாமி கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது தோல்வியடைந்திருந்தார். எனினும் சிறீலங்கா அரசுக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றின் மூலம் இவர் மாகாணசபை உறுப்பிராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் பி.மெளனகுருசாமி தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலிருந்து ஒதுங்குவதாக லண்டனில் இருந்தவாறு அறிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது தனக்காக வாக்களித்த 10 பேருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இவரது அறிவித்தல் இன்று வெளியாகியதை அடுத்து, பிள்ளையான் குழு சார்பாக திருகோணமலையில் போட்டியிட்ட ரகு, மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரசாந்தன் ஆகிய இருவரில் ஒருவருக்கு போனஸ் ஆசனத்தை வழங்குவது பற்றி பிள்ளையான் குழுவினர் ஆராய்ந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.